தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகாவிற்குள்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டி நடத்துவதற்குக் காவல் துறையினரிடம் அனுமதி கேட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி, சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியரிடம் குடும்ப அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளைப் பேரணியாகச் சென்று ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி உரிமை மீட்பு போராட்டம் மூலம் தற்போது கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வியாசர்பாடி கொள்ளைச் சம்பவத்தில் 4 பேர் கைது