கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாத காலமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தொகை வசூல் செய்வதில் கடினம் காட்டக்கூடாது எனவும், கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை, ஆலங்குளம், செங்கோட்டை தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நுண்நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழு பெண்களிடம் அடாவடியாக பண வசூலில் ஈடுபடுவதாகக் கூறி, சுய உதவி குழுவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், " தென்காசி மாவட்டத்தில் உள்ள நுண்நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி, கரோனா காலத்தில் சுய உதவிக்குழு பெண்களிடம் அடாவடியாக ஆபாசமாக பேசி தற்கொலைக்கு தூண்டும் வகையில், கட்டாய வசூல் மற்றும் கட்டாய அபராத வட்டி வசூல் செய்து வருகின்றனர்.
எனவே நிதிநிறுவனங்கள் வசூல் செய்யும் காலத்தை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும், கரோனா காலத்தில் கடுமையாக வசூல் செய்தும், தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படும் நிதி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.