தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம்வரை கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து நேற்று மேலும் ஒரு நபர் கரோனாவால் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தேவைகளுக்காக மாவட்ட காவல் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி நகர காவல் ஆய்வாளர் ஆடிவேல் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க உதவி எண்களை அறிவித்துள்ளோம்.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பொருள்களுக்கு இனி வெளியில் செல்ல வேண்டாம். 9943318742, 9345504458, 8754953113 இந்த மூன்று உதவி எண்களில் தொடர்பு கொண்டால் மளிகை பொருள்கள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வீடு தேடி கொண்டு வரப்படும்.
இதற்காக 50 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்நேரமும் எங்களை தொடர்பு கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் போன் செய்தால் அவர்கள் வீட்டிற்கு வாகனம் அனுப்பப்படும். அவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவமனைக்குச் சென்று வரலாம்.
இதேபோல் 24 மணி நேரமும் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே மருந்து, மாத்திரைகள் தேவைப்படுபவர்கள் உதவி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒன்றிணைவோம் கரோனாவை விரட்டுவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேப் மூலம் மக்களை கண்காணிக்கும் காவல் துறை கண்காணிப்பாளர்