தென்காசி: ஊரக மற்றும் நகரப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தல் பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவித்தபடி, அதற்கான தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்டத்தின் ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 உறுப்பினர்கள், நகரப் பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 5 உறுப்பினர்கள் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்பு, வேட்புமனு பரிசீலனை 12ஆம் தேதி நடைபெற்றது.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழா: மாதுளை முத்துக்கள் அலங்காரத்தில் மஹா வாராஹி அம்மன்!
இதனைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளில் 10 பேர், நகர்ப்புற பகுதிகளில் 14 பேர் என மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மாலையில் எண்ணப்பட்டன. இதில் ஊரகப் பகுதியில் உதயகிருஷ்ணன், சுதா, பி.சுதா, தேவி, பூங்கொடி, மாரிமுத்து, மைதீன்பீவி ஆகியோரும், நகர்ப்புற பகுதியில் சக்திவேல் சுரண்டை நகராட்சி, கவுசல்யா சங்கரன்கோவில் நகராட்சி, உலகேஸ்வரி சிவகிரி பேரூராட்சி, முருகன் கடையநல்லூர் நகராட்சி, சரவணன் வாசுதேவநல்லூர் பேரூராட்சி ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றனர். ஆக மொத்தமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் 12 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார். மேலும், இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தென்காசி திமுக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரையின் ஆதரவாளர்கள் என்பதால் அங்கு வந்த ஆதரவாளர்கள், தொண்டர்கள் மேளதாளத்துடன் பட்டாசுகள் வெடித்து நடனம் ஆடியபடி கொண்டாடினர். இந்த வெற்றி கொண்டாட்டத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கோடை விழா தொடக்கம்.. 16 மாநிலங்களைச் சேர்ந்த 270 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு