தென்காசி மாவட்டத்தில் பருவமழை கடந்த ஆண்டு பெய்யாததால் கார், பிசான சாகுபடியை மேற்கொள்ளாமல் விவசாய பெருமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர். இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கடனா அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளவை எட்டியதால் தண்ணீர் பிரச்னையின்றி விவசாயிகள் பிசான சாகுபடியை மேற்கொண்டனர். நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன், வேளாண்மை துறை அலுவலர்கள் முதற்கட்டமாக புளியரையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 19 கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படுவதாகவும் இதன் மூலம் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்த விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனக் கூறினார். மேலும் கொள்முதல் செய்த நெல்க்கான பணத்தை அவரவர் வங்கி கணக்கில் செல்லுத்தப்படும், எனவே இடைத்தரகர்களை நம்பி நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.