தென்காசி: செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் முத்துமாரி. இவர் ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் பணிகள் செய்யாமலேயே போலி ரசீது மூலம் பணம் கையாடல் செய்து வருவதாகவும், சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மூலம் பெறப்படும் வாடகை பணத்தை ஊராட்சி நிதியில் சேர்க்காமலும், ரசீது வழங்காமலும் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், வரைபட அனுமதிக்கு லஞ்சம் கொடுக்காததால் பல கட்டிடங்களுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து கேள்விகள் கேட்கும் பொதுமக்களை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பப்பட்ட புகாருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர், ஊராட்சி மன்றத் தலைவர் செய்யும் அனைத்து மோசடிகளுக்கும் உறுதுணையாக இருப்பாரோ என்று ஐயப்பாடு எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தனி அதிகாரி அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து சீவநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் என்று கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சீவநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தினை பலமுறை சீர் செய்ய வட்டார அளவில் முயற்சி செய்தும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினருக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இக்காரணத்தால் ஊராட்சி பணிகள் அத்தியாவசியம் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ஈட்டல் பிரிவு 203-இன்படி சீவநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வே.முத்துமாரி மற்றும் துணைத் தலைவர் பட்டுராஜ் ஆகியோரது காசோலைகள் மற்றும் PFMS Print Payment Advice-களில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம் பற்றிய பாடம்!