கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர, வழி தெரியாமல் உலகத் தலைவர்களே குழம்பிப் போய் உள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவ ரீதியாக பேரழிவை ஏற்படுத்தி வரும், இந்த வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அதிகப் பணம் தேவைப்படுவதால், நிவாரணம் வழங்கும்படி பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதை ஏற்று பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் உஜினி சுகுமார் (8). இந்தச் சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் உஜினி சுகுமார், அவ்வப்போது தனது தந்தை தரும் பணத்தை செலவு செய்யாமல் வங்கி உண்டியலில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், உலக நாடுகள் கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த சிறுவன், தனது தாய் நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
அதன்படி, தான் சேமித்து வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை பிரதமரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி, அதில் வைரஸ் நிவாரணத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பி உள்ளேன். உலக மக்கள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறு வயதில் பிறருக்கு முன்னுதாரணமாக நாட்டு மக்களின் மீது அக்கறையுடன் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரணத்துக்கு வழங்கிய உஜினி சுகுமாரின் செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:நிவாரண நிதி பெற மலையேறிய மக்கள்