தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (25). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷூம் (27) கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு சம்பவம் காவல் நிலையம்வரை சென்றுள்ளது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் செல்வமணி யார் என்றே தனக்கு தெரியாது என சதீஷ் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வமணி, சதீஷ் தன்னுடன் நெருங்கி பழகியதற்கான ஆதாரங்களாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், காணொலிகள் என அனைத்தையும் காவலர்களிடத்தில் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் செல்வமணியை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக சதீஷின் உறவினர்கள் செல்வமணியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சளால் செல்வமணி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில இளைஞர் கொலை - 10 பேர் கைது