தென்காசி: தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு சார்பில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமீப காலமாக நாடார் சமுதாயத்திற்கு உரித்தான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பல்வேறு அவப்பெயரை சந்தித்து வருவதைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; ''தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கடந்த 1921ஆம் ஆண்டு நாடார் வங்கி லிமிடெட் என்று தொடங்கப்பட்டு, 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாடார் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட இந்த வங்கியானது சமீப காலமாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க: Vande Bharat: வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைப்பு? குறைவான பயணிகளின் வருகையால் முடிவா?
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதில் ரூ.4110 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என்று வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்த வங்கி நாடார் சமுதாயத்தை விட்டு போகின்ற ஒரு நிலைமையிலிருந்து வருகிறது. வங்கியின் 47 சதவீத பங்குகள் மொரிசியஸ் நாட்டு கம்பெனிகள் வைத்திருக்கின்றனர். 4 சதவீதத்திற்கு மேல் உள்ள பங்குகள் தனியார் காப்பீடு நிறுவனங்கள் வைத்திருக்கிறது.
ஏறக்குறைய 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள பங்குகள் வெளிநாட்டில் இருக்கும் நாடார்கள் இல்லாத அந்நியர்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியில் வெளிநாட்டில் இருக்கின்ற பங்குகளை திரும்பப் பெறாவிட்டால் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மொரிசியஸ் நாட்டு வங்கியாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. அதனால் வெளிநாட்டில் இருக்கின்ற பங்குகளை வாங்குவதற்கான முயற்சிகளை நாடார் சமுதாய பெரியவர்கள், வணிகர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
நாடார் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட வங்கியை நாடார் சமுதாயமே வெறுக்கின்ற வகையில் வணிகத்திற்குக் கடன் கொடுப்பதை தவிர்த்து வங்கியின் மீது நாடார் சமுதாயத்திற்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்படுகின்ற அளவுக்கு வங்கி நிர்வாகம் செயல்படுகிறது. எனவே, வெளிநாட்டில் உள்ள 50 சதவீதத்திற்கு மேல் உள்ள பங்குகளை பெறுவதற்கு இங்கு உள்ள நாடார் சமுதாயப் பெரியவர்கள் வணிகர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!