நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் மக்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் மத்திய மாநில அரசுகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் வாழ்வாதாரம் இழந்து சிக்கி தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இணையவழி போராட்டங்களையும், அவரவர் வீட்டு மாடிகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஜூன் 15ஆம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் வெளிமாநிலத்தில் தவிக்கும் தமிழ்நாடு மக்களை மீட்டு தாயகம் அழைத்துவர விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.