தென்மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கொலை சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறையினரிடையே தென் மண்டல காவல்துறை ஐஜி முருகன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்று (ஆக.27) தென்காசி மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் வைத்து தென் மண்டல காவல்துறை ஐஜி முருகன், நெல்லை மாவட்ட சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோரிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்ற செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியான புளியரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். காவல்துறையினர் பொதுமக்களிடையே கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.