தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தாங்குளம் பகுதியை சேர்ந்த மாடப்பதேவர். இவர் அப்பகுதியில் பால் மாடுகளை பராமரித்து வந்தார்.
இவரது மகன் செல்வராஜும் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு செல்வராஜுக்கும் அவரது தந்தை மாடப்பதேவருக்கும் மாட்டு தொழுவத்தில் வேலை செய்யும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த செல்வராஜ், பால் கறந்து கொண்டிருந்த தந்தையை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாடப்பதேவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சின்ன கோவிலங்குளம் காவல் துறையினர் , உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இவர் எட்டு ஆண்டுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டு குற்றாலத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளதும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல் நிலை மோசமானதை அடுத்து குற்றாலத்தில் உள்ள மனநல காப்பகத்திலிருந்து வீடு திரும்பி உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக செல்வராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.