தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கடங்கநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (48), இவரது கணவர் சுப்பிரமணியன். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் இசக்கியம்மாள், மாரிச்செல்வம் மற்றும் மணிரத்தினம் (27) ஆகிய இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் மணிரத்னம் தனது தாயுடன் சேர்ந்து கூலி வேலை செய்துவருகிறார். மணிரத்தினம் சில மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை தூங்கிக்கொண்டிருந்த இசக்கியம்மாள் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் மணிரத்தினம் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் மணிரத்தினத்தை மீட்டு, ஆம்பூலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இசக்கியம்மாள் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் நிலைய ஆய்வாளர் தனலெட்சுமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!