தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள கங்கணங்கிணறு அரிசன் நடுநிலை பள்ளியில், தமிழக வணிகர் சம்மேளனம், சார்பில் சிலம்பம் பள்ளி இணைந்து மாபெரும் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார். அரிசன் நடுநிலைப் பள்ளி நிர்வாகி மரியஅருள்மணி தலைமை வகித்தார்.
மேலும் தமிழர் வணிக சம்மேளனம் தலைவர் தமிழ்செல்வம், மாநில துணைத் தலைவர் மைக்கேல் ஆரோக்யராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிலம்பம், வாள்வீச்சு, சுருள்பட்டை ஆகிய போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் அப்துல் கலாமின் திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மலர்கள் தூவப்பட்டு வணங்கினர். பின்னர் அரசன் நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவியர் சிலம்பம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றான போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் சிலம்பாட்டம், தற்காப்பு கலையாக இருப்பதுடன் கூட அல்லாமல் உடல் மற்றும் மன நலத்துக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உகந்த சிறப்பான கலையாக திகழ்கிறது.
இந்த கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயதுபேதமின்றி அனைவரும் கற்றுக்கொள்ளலாம், உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது மட்டும்மில்லாமல் இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது. இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்தில், சிலம்பக்கலைகள் மனிதர்களை விட்டு விலகிச் செல்லும் சூழல் ஏற்படுவதை உணர்ந்த சிலர், அனுபவம்மிக்க சிலம்பம் பயிற்சியை ஆர்வத்துடன் கற்றுக்கொள்பவர்களை கண்டறிந்து, எவ்வித பிரதிபலனும் பாராமல், கற்றுக் கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தமிழர்களுடைய வீர விளை யாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் சிலம்பத்தை பெண்கள் முறைப்படி பயிற்ச்சி பெற்றால் இன்னும் வீரத்தில் சிறப்பாக விளங்கலாம். சிலம்பம் ஒரு கலை மட்டுமல்ல, அதன்மூலம் உடலும் மனதும் ஒருநிலைப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதுதொடர்பாக பயிற்சியாளர் ஆஷா பதி கூறுகையில், "சிலம்பம் கலை எதிகாலத்திலும் இன்னும் சிறப்பாக பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை தேடிப்பிடித்து பயிற்சி அளித்து வருவதுடன், பெண் குழந்தைகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் சிலம்பக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இப்பணியை செய்து வருகிறேன்.
பயிற்சி பெறும் மாணவிகளைக் கண்டு, மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்" என்றார். மேலும் இந்நிகழ்வின் முடிவில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாஜக மாநில துணைத் தலைவர், ஆனந்தன் சான்றிதழ்களும், பரிசு கேடயங்களும் வழங்கினார்.