தென்காசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் கலப்படமான முறையில் தயாரிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்து வந்தது.
இதனையடுத்து தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான ஹக்கீம் தலைமையிலான குழு தீவிர சோதனை நடத்தினர். அப்போது கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் உள்ள கடைகள், பால் வியாபாரிகள், மளிகைக்கடைகள், கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து ரூ.8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமுத்திரம் பகுதியில் இயங்கி வந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தற்காலிகமாக சீல் வைத்தனர். மீண்டும் இது போன்று செயல்பட்டால் நிரந்தரமாகக் கடைகள் சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய குட்கா, பான் மாசாலா போன்ற பொருள்களை அரசு தடை செய்தலும் பல இடங்களில் இது போன்ற பொருள்கள் விற்பனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரோடு போட்ட ஒரே மாதத்தில் பெயர்த்தெடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்.. மக்கள் பணத்தை வீணடிப்பதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு!