தென்காசி: சிவகிரி வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் பல்வேறு விதமான இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. இப்பகுதியில், யானை, மான், கரடி, புலி போன்ற பல்வேறு விதமான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வனவிலங்குகள் விவசாய நிலத்திற்கு வருவதும், நிலங்களை அழித்துச் செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சிவகிரி வனப்பகுதியில் கடந்த மே மாதம் சுனை பாறை பகுதியில் தனியார் தோட்டத்தில் புகுந்த யானை, தோட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரகாளை என்பவரைத் தாக்கியது. இந்த தாக்குதலில் வீரகாளை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புடைய சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்!
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் முறையீடு செய்தனர். இந்நிலையில், தமிழக அரசு மூலமாக, பாதிக்கப்பட்ட வீரகாளை குடும்பத்திற்கு, வனத்துறையின் சார்பாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை அவருடைய மனைவியிடம் வழங்கப்பட்டது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு, தனி நபர்கள் தனியார் தோட்டத்தில் வேலை செய்யும் போது முழுமையான பாதுகாப்புடன் வேலை செய்ய வேண்டும். வனவிலங்குகளிடம் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும், வனவிலங்குகள் தோட்டத்தில் வரும்பொழுது வனத்துறையினருக்கு முறையான அறிவிப்பு அளிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் வனத்துறை அலுவலகர் மௌனிகா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கோவையில் மழை பாதித்த இடங்களில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி நேரில் ஆய்வு!