தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவர் பிப்ரவரி 6ஆம் தேதி உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்தினருடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரைப் பார்க்கச் சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர்.
தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, 100 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றைக் திருடிச் சென்றனர். வீடு திரும்பிய சந்திரசேகர் வீட்டின் பூட்டு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது நகை காணாமல்போனது தெரியவந்தது.
உடனே திருட்டு குறித்து குற்றால காவல் துறையினருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கைரேகை வல்லுநர்களை வைத்து தடயங்களைச் சேகரித்தனர். அதே பகுதியில் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சியும் செய்துள்ளனர். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: கஞ்சா வியாபாரி தாக்கப்பட்ட வழக்கு கொலைவழக்காக மாற்றம்- வெளியான வீடியோ காட்சி