தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள், பால் உள்ளிட்டவை ஏற்றி செல்லப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழ்நாடு அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை சில சமூக விரோதிகள் கேரள மாநிலத்திற்கு ரகசியமாக கடத்தி வருகின்றனர். சமீபத்தில் லாரியில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டைகள் எல்லை சோதனை சாவடியில் சிக்கியது. அதே போல், காய்கறி லாரியில் அரிசி கடத்தியபோது வாகனம் விபத்துக்குள்ளானதால் கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் இன்று, பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து காய்கறி ஏற்றிச்சென்ற கேரள பதிவெண் கொண்ட பிக்கப் வாகனத்தில் சுமார் 40 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்துக்கொண்டு செல்கையில், தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள சோதனை சாவடியின் வாகன சோதனையில் பிடிபட்டது. உடனடியாக வாகனத்தையும், அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.