தென்காசி: தமிழகத்தில் வளிமண்டல தாழ்வு நிலையால் டிச.17, 18 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் விடிய விடிய பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மேலும், தென்காசி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, வீடுகளும் சேதம் அடைந்தன. இந்நிலையில், இன்று (டிச.26) தென்காசி மாவட்டத்தில் வெள்ள பாதித்த பகுதிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கனமழையின் காரணமாக விவசாய நிலங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வுப்பணிகள் முடிந்த பின்பு சங்கரன்கோவிலில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து கனமழைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “தென்காசி மாவட்டத்தில் வெள்ளத்தால் மக்காச்சோளம், நெற்பயிர்கள், உளுந்து போன்றவை அதிகப்படியாக சேதங்கள் அடைந்துள்ளதால் இன்று அந்த பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் என ஏராளமானவர் சென்று அந்த பகுதியை ஆய்வு செய்துள்ளோம்.
அதிகப்படியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக நிவாரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், தென்காசி மாவட்டத்தில் நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டதாரர்களுக்கும் தமிழக முதலமைச்சர் கூறியதற்கு இணங்க இன்று (டிச.26) ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகப்படியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எந்த விதமான பாகுபாடும் இன்றி உடனடியாக நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்கள் என்றால் அந்த குற்றங்களை நாங்கள் திருத்திக்கொள்கிறோம்.
நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவரும் நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராகத்தானே இருந்தார். அவர் எவ்வளவு கொடுத்தார்” எனத் தெரிவித்தார்.