தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து, காட்டுப்பன்றி, கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவாரத்திலுள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து, பயிர்களை நாசப்படுத்தியதோடு, மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் தென்னை, கடலை ஆகியவைகளை பயிரிட்டுள்ளார். மேலும் கோழி பண்ணையும் அமைத்து பராமரித்து வருகிறார். இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இவரது தோட்டத்தில் புகுந்த கரடி, தேங்காய்களை திண்றதுடன், கோழிகளையும் பிடித்து கொன்று அட்டகாசம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமரா வைத்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை10) மீண்டும் தோட்டத்தில் புகுந்த கரடி 20க்கும் மேற்பட்ட கோழிகளை பிடித்து கொன்று தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பண்ணை உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தோட்டத்தில் கூண்டு வைத்து கரடியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்டுக்குள் விட சென்ற கரடி தாக்கி வனத்துறையினர் இருவர் காயம்!