தென்காசி பெரும் வியாபாரத் தலமாகவும் அதிகப்படியான பொதுமக்கள் நடமாட்டத்தைக் கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தில் தென்காசி காவல்நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் ஏராளமானவர்கள் தங்களது செல்போன்களைத் தொலைத்துவிட்டதாகப் புகார் அளித்துவந்தனர். இது சம்பந்தமாக நிலையத்தில் வரப்பெற்ற புகார்களைப் பெற்று மனு ரசீது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் மாரிமுத்து, மாதவன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்போன் தொலைந்துபோன மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்றமைக்கு உரியவர்கள் தென்காசி காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.