தென்காசி: தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான புளியரை வழியாகக் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்திக் கொண்டுவருவதாகத் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து, காவல் சிறப்புப் பிரிவினர் புளியறை சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவிலிருந்து வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது, காரில் கட்டுக் கட்டாக பான் மசாலா, குட்கா என சுமார் 1250 கிலோ போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்த சிறப்பு பிரிவினர், அதனைக் கொண்டு வந்த செண்பகராமன் என்பரையும் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் என்பதும், அவர் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 24 ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளதும் தெரியவந்தது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக புளியரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செண்பகராமனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பூஜை எனக்கூறி இளம்பெண் பாலியல் வனகொடுமை.. தெலங்கனாவில் நிகழ்ந்த பகீர் சம்பவம்.. வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?