தென்காசி: ஏராளமான கிராமப்புறங்கள் நிறைந்த பகுதியாகத் தென்காசி மாவட்டம் உள்ளது. இங்கு உள்ள பொதுமக்களில் அதிகப்படியானவர்கள் விவசாயத்தையே தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் கண் சிகிச்சை மையங்கள் உள்ளன. குறிப்பாக சுரண்டை, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பகுதியில் ஏராளமான கண் சிகிச்சை மையங்கள் காணப்படுகின்றன.
மேலும் தென்காசி பகுதிகளில் உள்ள அதிகப்படியான பொதுமக்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்வதையே வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு விதமான கண் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளுக்கு செல்லக்கூடிய பொது மக்களுக்குத் தென்காசி மாவட்டத்தில் உள்ள ப்ரோ விஷன் கண் மருத்துவமனையில் நியூமேடிக் ரெட்டினோபெக்ஸி (Pneumatic Retinopexy) என்ற புதுவிதமான நவீன சிகிச்சை மூலம் மருத்துவர் ராஜகுமாரி குணப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சுரண்டையைச் சேர்ந்த சுந்தர் ராஜன் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்களில் பூச்சி பறப்பது போல் உணர்ந்துள்ளார். இதனையடுத்து, கண் சிகிச்சைக்காக மருத்துவர் ராஜகுமாரியை சந்தித்தபோது, சுந்தர் ராஜனின் கண் விழித்திரை கிழிந்து நரம்பு பிரிந்திருப்பது கண்டறியப்பட்டது.
பொதுவாக இதுபோன்ற பார்வை குறைபாடு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். ஆனால் அறுவை சிகிச்சை முறையிலும் நோயாளிக்கு 50 சதவீத அளவில் மட்டுமே பார்வை மீண்டும் கிடைக்கும் என்ற நிலையில் அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர் ராஜகுமாரி புதிய முறையில் நுட்பமாக ஊசி (gas injection) மற்றும் லேசர் மூலம் பார்வையை மீட்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மருத்துவர் ராஜகுமாரி கூறுகையில், "இது போன்ற பாதிப்புக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளிக்கு வலியும், குணமடைய மூன்று மாதங்களும் தேவைப்படும். இந்த புதிய சிகிச்சை முறையில் மூன்றே நாட்களில் முழு பார்வையையும் மீட்க முடியும்.
மேலும், இத்தகைய சிகிச்சையை தென் தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி ப்ரோ விஷன் கண் மற்றும் விழித்திரை சிகிச்சை மையம் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளது" என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, சிகிச்சை பெற்ற சுந்தர் ராஜன், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் நவீன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. பசியால் பரிதவித்த பயணிகள்!