தென்காசி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், நாதஸ்வர நையாண்டி மேளக் கலைஞர்கள், கணியான் கூத்து கலைஞர்கள், கரகாட்டக் கலைஞர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டு இருப்பதால் எந்தவித திருவிழாக்களும் நடைபெறாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், கரோனா ஊரடங்கு உத்தரவில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் அனைத்து தொழில்களும் நடைபெற்று வரும் நிலையில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் எங்களது வாழ்வாதாரம் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோயில்களை திறக்க அனுமதி அளித்து வரும் நிலையில், திருவிழாவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மேலும் நாங்கள் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுடைய கரோனா குறித்து விழிப்புணர்வுகளை வில்லிசை பாடல்கள் மூலமாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்தனர்.