தென்காசி: தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில், தென் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புதல் மற்றும் ஒன்றிய குழு பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்காசியில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் மு.ஷேக் அப்துல்லா தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மு.அழகு சுந்தரம், கா.பிரியா, ஆ.கலாநிதி, க.மல்லிகா, வினோதினி, செல்வ விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தென் மாவட்டத்தில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக அளவு நிவாரணப் பொருட்கள் அனுப்புதல் மற்றும் தென்காசி ஒன்றிய குழு பகுதியில் ரூ.1 கோடியே 74 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மு.ஷேக் அப்துல்லா பேசுகையில், “சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தென்காசி ஊராட்சி ஒன்றியம் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, தென்காசி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தென்காசி ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 15 லட்சம் செலவில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 74 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடி கனமழை பாதிப்பு.. களத்தில் இறங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்!