தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதில் கடனா நதி, ராமநதி, குண்டாறு, கருப்பா நதி உள்ளிட்ட நான்கு நீர்த்தேக்கங்களும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக செங்கோட்டை அருகே உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட சிறிய நீர்த்தேக்கமான குண்டாறு அணை கடந்த எட்டு மாதங்களாக முழு கொள்ளளவை தக்கவைத்து நிரம்பி வழிந்து வருகிறது. 84 அடி கொண்ட ராமநதி அணை, 85 அடி கொண்ட கடனா நதி, 72 அடி கொண்ட கருப்பா நதி உள்ளிட்ட அணைகளும் தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் இந்த நான்கு அணைகளும் வரக்கூடிய நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உயர்ந்துள்ளது. இதில் நீர்வரத்து 60 கன அடியாகவும், 15 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டும் வருகிறது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் தொடர்மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு