தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த ராயகரி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகதுரை. இவர் தனது மூளையின் ரத்த நாணங்களில் கசிவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சண்முகதுரையின் உறவினர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சண்முகதுரைக்கு ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சண்முகதுரை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், சண்முகத்துரையின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சண்முகதுரையின் உடல் உறுப்புகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையும் படிங்க: பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர அக்.18, 19 தேதிகளில் புதிதாக விண்ணப்பிக்கலாம்!
அந்த வகையில் சண்முதுரையின் நுரையீரல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு விமான மூலம் கொண்டு செல்லப்பட்டது. அதேபோன்று அவரது கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் சண்முகதுரையின் ஒரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
அதேபோல் சண்முகதுரையின் கண்ணின் கருவிழிகளும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதனை அடுத்து தமிழக அரசின் அறிவிப்பின் அடிப்படையில் உடல் உறுப்பு தானம் செய்த சண்முகத்துரையின் உடலுக்கு மருத்துவர்கள் தரப்பில் மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் சண்முகதுரையின் உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள், இறுதிச் சடங்கிற்காக தங்களது சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர். மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சண்முகதுரையின் உடல் உறுப்புகள் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுப் பயனடைய உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.