தென்காசி: கடையம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன்-முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் முப்புடாதி (19). பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய இவர், தனது விடைத்தாள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்து மனு அளிப்பதற்காக நேற்று (அக்டோபர் 22) தூத்துக்குடி சென்றிருந்தார்.
மாணவியை ஏமாற்றிய கண்காணிப்பாளர்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் நான் கலந்து கொண்டேன். எனக்கு நெல்லை மாநகராட்சிக்குள்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் அறை எண் ஒதுக்கப்பட்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன்.
தேர்வு முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் அறைக்குள் நுழைந்த தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் எனது பெயரையும் விபரங்களையும் குறிப்பிட்டு எனது விடைத்தாளை பெற்றுக்கொண்டார்.
"எதற்காக விடைத்தாளை எடுத்துக் கொள்கிறீர்கள் என நான் கேட்டதற்கு" என்.டி.ஏ.விலிருந்து எனது விடைத்தாளை நகல் எடுத்து அனுப்ப சொல்லியிருப்பதாக அவர் கூறினார். எனது விடைத்தாளை கண்காணிப்பாளர் நகலெடுக்கையில் நானும் உடன் சென்றேன்.
இதைத் தொடர்ந்து அவர் என்னை அங்கிருந்து புறப்பட்டு செல்ல கூறினார். விடைத்தாளை நான் திரும்ப கேட்டதற்கு அதை நாங்களே தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விடுகிறோம் எனக் கூறினார். இதை நம்பி நானும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டேன்.
விடை தாளில் மோசடி
இந்நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் நீட் தேர்வர்களின் விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், எனது பதிவெண் கொண்டு நான் எனது விடைத்தாளை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அப்போது அதில் மிகப் பெரும் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
![neet exam neet exam forgery forgery omr sheet omr sheet forgery omr sheet forgery in neet exam thenksi neet student issue neet exam issue ஓ எம் ஆர் ஷீட்டில் மோசடி நீட் தேர்வில் மோசடி நீட் நீட் தேர்வு தென்காசி மாணவின் விடை தாளில் மோசடி விடைத் தாளில் மோசடி நீட் தேர்வின் விடைதாளில் மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-02-neetexam-omr-sheet-forgery-issue-vis-script-tn10058_22102021145041_2210f_1634894441_958.png)
நீட் தேர்வு முடிந்து நான் வீட்டிற்கு வந்தபிறகு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை வைத்து சுய மதிப்பீட்டு பார்க்கையில் 606 மதிப்பெண் கிடைக்கும் என மதிப்பட்டிருந்தேன். ஆனால் தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாளின்படி நான் 33 மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
எனவே இதன் பின்னணியில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது. எனது ஓ.எம்.ஆர். விடைத்தாள் மாற்றப்பட்டு என்னை வேண்டுமென்றே தேர்வில் தோல்வியடைய செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த முறை நடந்த நீட் தேர்விலும் இதே போல எனது விடைத்தாள் மாற்றப்பட்ட விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே நீட் தேர்வு கவுன்சிலிங் முடிந்து விட்டதால் எனது வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் நீட் தேர்வில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு முடிவுகள் வரும் முன்பாக எனக்கு நடைபெற்ற மோசடி குறித்து விசாரணை நடத்தி உரிய நீதி பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 156 பேர் விடுவிப்பு