தென்காசி: அதிமுக ஆட்சியில் தீர்வு காணப்படாத குறைபாடுகள் குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. இவை, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உறுதியாக தீர்வு காணப்படும் என அக்கட்சியின் விவசாய மாநில அணி செயளாலர் ஏ.கே.எஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் முதற்கட்டமாக தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் அக்கட்சியின் விவசாய மாநில அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் பரப்புரை பயணத்தை மேற்கொண்டார்.
இந்த பரப்புரை பயணத்தில் வியாபாரிகள், மண்பாண்ட தொழிலாளர், நூறு நாள் வேலைத் தொழிலாளர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை பயணத்தின்போது பொதுமக்கள் அதிமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக தேசிய ஊரக வேலை திட்டத்தில் சரியாக வேலை கொடுப்பதில்லை, முறையான சம்பளம் வழங்குவதில்லை. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவதில்லை, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுப்பதில் சிரமம் குறித்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் ராமநதி, கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகள், கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் யாவும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தீர்க்கப்படாத பிரச்னைகள் யாவும் திமுக ஆட்சியின் தீர்க்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆன்மிக அரசியலுக்கு எதிரானது இல்லை எனவும் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் அமர வைக்க பொதுமக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை?