தென்காசி: தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள், திருநங்கைகளை அவமதிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் நேரலையில் ஈடுபட்ட திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்திற்கு 11 மணி அளவில் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். ஆனால், கூட்டம் ஒரு மணி அளவில் துவங்கப்படாத நிலையில், திருநங்கைகள் தங்கள் மொபைலில் சமூக வலைதளங்களில் நேரலையில் தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும், தங்களுக்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சமூக நலத்துறை சார்பில் தங்களுக்கு எந்தவித முகாம்களும் முறையாக நடத்தப்படுவதில்லை, தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் அலட்சியம் செய்யும் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூட்டத்திற்கு வரச்சொல்லி தங்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என சமூக வலைதளங்களில் நேரலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறைதீர்க்கும் முகாமில் சமூக நலத்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டது திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அறிந்த அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் உடனடியாக பங்கேற்று திருநங்கைகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த மனு குறித்து செய்தியாளர்களிடம் திருநங்கைகள் கூறுகையில்; 'மாவட்டத்தில் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். எங்களுக்கென்று தனியாக சொந்த வீடு கிடையாது. தங்களுக்கு சொந்தமாக இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், இதுவரை தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் அல்லது சமூக நலத்துறை சார்பில் மானியக் கடன் பெற விண்ணப்பித்தாலும் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஆனால், அதே சமயம் எங்களுக்கு கைத்தொழில் சம்பந்தமான எந்தவித பயிற்சியும் இதுவரை தென்காசியில் நடைபெறவில்லை. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை திருநங்கைகளுக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லை. தனியாக நடந்து சென்றாலும் கூட்டமாக சென்றாலும் தவறு செய்யாமலே காவல்துறையினர் மூலம் தண்டிக்கப்படுகிறோம்’ எனக் குற்றம்சாட்டினர்.
பொதுஇடங்களில் சில நபர்களால் மன உளைச்சலுக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஏற்காடு படகு இல்லத்தில் புதிய உணவகம்; சுற்றுலாத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் திறந்து வைப்பு..