தென்காசி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இன்று (டிச.19) தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த இரண்டு நாட்களாக தென்மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களும் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதிக அளவில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தென்காசி மாவட்டத்தில் விவசாயத் துறை அதிகாரிகளின் மூலமாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேற்று (டிச.18) வரை கணக்கிடப்பட்டதில், நெல் பயிர் 3,009 ஹெக்டர், மக்காச்சோளம் 4,200 ஏக்கர் மற்றும் பயிறு வகைகள் 13,800 ஏக்கர் என மொத்தமாக தென்காசி மாவட்டத்தில் சுமார் 21,262 ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளது. மேலும், இந்த கணக்கெடுப்பு இன்றும் (டிச.19) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கனமழையினால் இரண்டு கால்நடைகளைத் தவிர பெரிதாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், தென்காசியில் 15 முகாம்கள் ஏற்பாடு செய்து, அதில் 521 நபர்களை தங்க வைத்துள்ளோம். அங்கு அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள், உணவுகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கும் மற்றும் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைப்பதற்கும் வழிவகை செய்து வழங்கப்பட்டும் வருகிறது. மேலும், மத்திய அரசின் ஆய்வுக் குழு வரும்பொழுது, பயிர் சேதம் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டு, உரிய நிவாரணம் கேட்டுப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆறு ஹெலிகாப்டர்கள் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், முப்படையின் வீரர்களையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
அந்த வகையில், பேரிடர் மீட்புப் படையினர் மொத்தம் 625 பேரும் பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பணியாளர்கள் 230 பேரும், இது தவிர்த்து முப்படையின் வீரர்கள் 168 பேரும் களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிக பாதிப்புள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வர இருக்கிறார்.
அதிக மழை பாதிப்புள்ள நான்கு மாவட்டங்களிலும் மருத்துவ முகாம் கண்டிப்பாக அமைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதி நிலையிலும், 46 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து உள்ளது. அரசு நிபந்தனைகளின்படி, இடிந்த கூரை வீடுகள் சிமெண்ட் வீடுகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் சேதம் அடைந்த பயிர்களுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும். தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, பயிர்களுக்கான காப்பீடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் ரயிலில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி!