தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்து நெடுவயல் ஊராட்சி தலைவராகவும் பாஜக ஒன்றிய பொருளாளராகவும் முப்புடாதி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 25ம் தேதி இந்த ஊராட்சியில் எழுத்தராக பணிபுரியும் மாரிமுத்து என்பவருக்கும், முப்புடாதிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மாரிமுத்துவை முப்புடாதியின் மகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், அச்சன்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி எழுத்தர் மீது புகார் அளிப்பதற்காக முப்புடாதி மற்றும் அவரின் மகன் மற்றும் பாஜக பிரமுகர்கள் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அங்கு இருந்த திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பாக மாறியது. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றியுடன் தாய் மண்ணுக்கு திரும்பிய பிரதமர் - வழிநெடுக உற்சாக வரவேற்பு