தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமத்தில் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஊருக்கு அருகிலுள்ள போகநல்லூர் ஊராட்சி சார்பில் ஒரு கிணறு தோண்டப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (மார்ச்.22) காலை நேரத்தில் குடிநீர் விநியோகத்திற்காக கிணற்று அருகே உள்ள மின் மோட்டாரை போடுவதற்காக ஊராட்சி ஊழியர் சென்றுள்ளார். அப்போது கிணற்றுக்குள் குழாய்கள் சரியாக உள்ளதா? என்று பார்த்தபோது கிணற்றில் தங்கம் போன்று மின்னியபடி ஒரு சாமி சிலை தண்ணீரில் மிதந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊராட்சி ஊழியர் உடனே சென்று ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கடையநல்லூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகளுக்கு அழைப்பு கொடுத்து வெகு நேரம் ஆகியும் அவர்கள் வரவில்லை. நீண்ட நேரமாக கிராம நிர்வாக அலுவலரோ, போலீசாரோ வராததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே கிணற்றுக்குள் இறங்கி கிணற்றில் மிதந்த சுமார் 5 கிலோ மதிப்புடைய ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை மீட்டனர்.
பிறகு அந்த சிலையை அருகே உள்ள கோயிலில் வைத்து சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர். போகநல்லூர் கிராமம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து விஷ்ணு சிலையை வழிபட்டனர்.
அப்பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடும் மக்கள் மிகவும் குறைவு. அப்படியிருக்கும்போது, விஷ்ணு சிலை எப்படி இந்த கிணற்றுக்குள் வந்தது? மர்ம நபர்கள் கடத்திக் கொண்டு வந்து சிலையை இங்கு போட்டார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சிலைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 16ஆம் தேதி வேலூர் அருகே ஐம்பொன் சிலையை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கட்டைப் பையில் கறிவேப்பிலைக்கு நடுவே ஐம்பொன் சிலையை மறைத்து வைத்து கடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து ஐம்பொன்னாலான ஒன்றரை அடி உயரமும், ஐந்தரை கிலோ எடையும் கொண்ட சிவகாமி அம்மையார் சிலையை பறிமுதல் செய்தனர். அந்த சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையது என தெரியவந்தது. அவர்கள் சிலையை திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கடத்தி வந்து மலைக்கோடி பகுதியில் விற்க முயற்சித்ததும் தெரியவந்தது. இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்திருந்தவரிடம், இரண்டு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. இவர்கள் பழைய இரண்டு ரூபாய் நோட்டை குறியீடாக பயன்படுத்தி சிலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: கருவேப்பிலைக்குள் மறைத்து ஐம்பொன் சிலை கடத்தல்.. வேலூரில் இருவர் சிக்கியது எப்படி?