சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி ப. தனபால், பேரவைத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது;
தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் கிராமம், பச்சேரியில், முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் நடைபெற்று வருகிறது. ஒண்டிவீரன் அவர்களின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளன்று அன்னாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டுமென மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல் நானும் ஒவ்வொரு ஆண்டும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு நேரில் சென்று மாவீரன் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், என்னால் நேரில் சென்று கலந்து கொள்ள இயலாத நிலை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளான இன்று(ஆகஸ்டு 20) அவர்தம் நினைவோடு வாழும் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் துணிச்சல், தியாகம், கடமை, நாட்டுப்பற்று ஆகியவற்றை நினைவுகூர்ந்து, அவற்றை இளைய தலைமுறைக்கு நாம் அனைவரும் எடுத்துச் செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.