தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில மோசடி, நில அபகரிப்பு, போலி ஆவணம் போன்ற புகார்களை உரிய முறையில் விசாரணை செய்வதற்கென நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்புப் பிரிவு மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கிவருகிறது.
மூன்று நபர்களின் நிலங்கள் மீட்பு
இந்நிலையில், சங்கரன்கோவில் கருத்தானூர் கிராமத்தில் வசித்துவரும் ராக்கன் என்பவரின் மகன் சின்னநாகப்பன் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தை போலியான ஆவணம் மூலம் எதிர்மனுதாரர் பிறருக்கு ஏற்பாடு ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளதாகவும் தனது இடத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகார் மனுவும்,
சங்கரன்கோவில் தாலுகா ஆண்டார்குளம் பகுதியில் வசித்துவரும் குருசாமி என்பவரின் மகன் ரவி என்பவர் ஈச்சந்தா கிராமத்தில் தனக்குச் சொந்தமான 41 ஏர் நிலத்தின் சரிபாதி நிலம் தனக்கு பாத்தியப்பட்டதாகவும் அதை எதிர்மனுதாரர் அவரது மனைவியும் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்ததாகவும் தனது நிலத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகார் மனுவும்,
பங்களாசுரண்டை பால்சாமி என்பவரின் மகன் நேசையா என்பவர் தனது தாத்தாவிற்குப் பாத்தியப்பட்ட 22 சென்ட் நிலத்தை தனது சித்தியின் மகன் போலி ஆவணம் தயார் செய்து அதை வேறொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டதாகக் கொடுத்த புகார் மனுவும்
என மூன்று மனுக்கள் குறித்து காவல் ஆய்வாளர் சந்திசெல்வி, சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி, நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்புப் பிரிவு காவலர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஒரேநாளில் மூன்று மனுக்களுக்குத் தீர்வுகண்டு பாதிக்கப்பட்டவர்களின் நிலம் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
துரித நடவடிக்கை மூலம் நிலத்தை மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு, மனு அளித்த மூன்று நபர்களும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வழக்கறிஞரைக் கொல்ல முயற்சி