தென்காசி: கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர், ரஜினீஸ் பாபு. இவர் அமெரிக்காவில் வசிக்கும் தனது அத்தை மகளான வந்தனா என்பவருக்கு, தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பகுதியில் சுமார் 23 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்காக கட்டட அனுமதி வேண்டி, குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, குத்துக்கல் வலசை பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவராக சத்தியராஜ் என்ற நபர் இருந்துள்ளார். இதனிடையே, ரஜினீஸ் பாபு கட்டட அனுமதி கேட்டு சத்தியராஜிடம் சென்ற போது, 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் கட்டட வரைபடத்திற்கான கட்டணமாக, அரசுக்கு ரூ.59 ஆயிரத்து 290 செலுத்த வேண்டும். மேலும் மொத்த எஸ்டிமேட்டில், தனக்கு 2 சதவீதம் அதாவது, 46 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் லஞ்சம் கொடுக்க மனம் வராத ரஜினீஸ் பாபு, தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரஜினீஸ் பாபுவுக்கு ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்திய படி, ரஜினீஸ் பாபுவும் ஊராட்சி மன்றத் தலைவரான சத்தியராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.46 ஆயிரத்தை கொடுத்ததாகவும், பின்னர் அவரிடம் பேரம் பேசியதன் விளைவாக, 6 ஆயிரம் ரூபாயை சத்தியராஜ் திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சத்தியராஜ் ரஜினீஸ் பாபுவிடருந்து பணத்தை பெற்றவுடன், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பஞ்சாயத்து தலைவரான சத்தியராஜ் கையும் களவுமாக சிக்கியுள்ளார். மேலும், அவருக்கு உதவியாக இருந்த ஒப்பந்தகாரர் செளந்தராஜ் என்பவரையும் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான ஆய்வாளர் ஜெயஸ்ரீ, எஸ்ஐ ரவி உள்ளிட்ட குழுவினர் இணைந்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை - நடந்தது என்ன?