கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து அச்சன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பரப்புரையை முடித்துவிட்டு செங்கோட்டை வழியாக ஆரியங்காவு சென்றகொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற பரப்புரை வாகனத்தை கட்டளைக் குடியிருப்பு அருகே கார், இருசக்கர வாகனத்தில் வந்த திமுகவினர் மறித்து, பாஜக வாகனத்தில் இருந்த கொடிகள் சின்னம் ஆகியவற்றைக் கிழித்து எறிந்து வாகனத்தில் வந்த ஓட்டுநர் சுபாஷ் என்பவரையும், மற்றொரு நபரையும் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்துவந்த அவர்கள் சம்பவம் குறித்து கேரளா வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் காரணமாக தமிழ்நாடு-கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தவந்த நிலையில், அங்கு விரைந்துவந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் சுபாஷ், அவருடன் வந்த நபரையும் வாகனத்தையும் புளியரை கோட்டைவாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் ஆய்வாளர், யார் யார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனால் கோட்டைவாசல் பகுதியில் தமிழ்நாடு-கேரள காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: 23 பேர் மரணம், ஒருவர் உயிருடன் மீட்பு