தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், கடனாநதி அணை பாசனத்தில் சுமார் 3,000 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடையம் வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றி, மான், கரடி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் அரசபத்து கால்வாய், குருவபத்து கால்வாய், ராமநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களில் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் ஆண்டுக்கு சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
மிளா, கரடி உள்ளிட்டவைகளை வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனக் கூறும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடையம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி, வனச்சரகர் தில்லைநாயகம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்தனர். 144 தடை உத்தரவு உள்ள நிலையில் சட்டத்தை மீறி கூடிய 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் கிடா சண்டைவிட்ட நபர்கள் கைது