தென்காசி மாவட்டம், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான புளியரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் செங்கோட்டை வனசரகத்திற்கு உட்பட்ட மோட்டை வனப்பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் வனவிலங்குகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதையொட்டி வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, புளியரை தெட்சிணாமூர்த்தி கோவில் பகுதியில் பகல் நேரத்திலும் கரடிகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதால் அந்த கரடியை பிடிப்பதற்காக, அப்பகுதியில் கூண்டு அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இவ்வாறு வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கவும், வன விலங்குகளை சமூக விரோதிகள் வேட்டையாடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வனக்காப்பாளர் அர்ஜுனனுடன் பெண் வனக்காவலர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அடர்ந்த வனப்பகுதியில் வைத்து அர்ஜுனன் அப்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகக்கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் வனக்காவலர் அளித்த புகார் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டார். இதன் பேரில் பாலியல் புகாரில் ஈடுபட்ட அர்ஜுனன் என்பவரை சிவகிரி வனப்பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் வனத்துறையில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சக ஊழியர்கள் தான் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.