தென்காசி : புளியங்குடி பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் புளியங்குடி சரகத்தில் வாகன ரோந்து சென்றனர். அப்போது புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் ஸ்டாண்ட் பகுதியில் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது.
பேருந்து நிலையம் அருகே சென்ற போது தகராறு ஈடுபட்ட கும்பல் அவசரமாக காரில் ஏறி வேகமாக தப்பினர். அப்போது காரை விரட்டிச் சென்று டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஆறு பேருடன் காரையும் புளியங்குடி காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், உள்ளார் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் (வயது 19), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 20), சிவகிரி பகுதியைச் சேர்ந்த கவிக்குமார் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 22) ஆகிய நான்கு பேருடன் இளஞ்சிறார்கள் இருவர் என்பது தெரிய வந்தது.
சிவகிரி பகுதியில் தனியார் செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டு விரட்டியடிப்பதை இந்த கும்பல் வாடிக்கையாக செய்து வந்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
இது குறித்து எவரும் புகார் அளிக்காததால் சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை 6 பேர் கொண்ட கும்பல் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இது குறித்து மேலும் புளியங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சிக்கிய ரூ.2.1 கோடி பணம்.. நடந்தது என்ன?