தென்காசி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால், வரும் 22 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த டிச.16 ஆம் தேதி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று (டிச.17) முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதீத கனமழையின் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் ஆறாக ஓடுகிறது. பலரது வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமான குற்றாலம் மெயின் அருவியின் தடுப்பு பாலத்தைத் தட்டும் அளவிற்குக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த விதமான அசம்பாவிதம் சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்குத் தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியிருப்புகளை சூழும் வெள்ளம் - தென்காசி ஆட்சியர் கொடுத்த அலெர்ட்