தென்காசி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால், வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த டிச.16 ஆம் தேதி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று(டிச.17) முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக சங்கரன்கோவில் - புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள கோவிந்த பேரி தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாசுதேவநல்லூர் பகுதியில் பெய்த கனமழையால், சங்கிலி வீரன் தெருவில் வீடொன்று இடிந்து தரைமட்டமானது. இப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடையநல்லூர், சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் பல்வேறு விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது எனவும் குளங்கள், ஏரி உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பெய்துவரும் கனமழையினால் தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 81 கோடி இந்தியர்களின் ஆதார், பாஸ்போர்ட் தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததா?! வீடியோ கேம் சகவாசத்தால் விபரீதம்! 4 பேர் கைது! என்ன நடந்தது?