தென்காசி: போக்குவரத்து தொழிலாளர்கள் 15வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஜன.9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.
சென்னையில் நேற்று தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, புளியங்குடி உள்ளிட்ட 4 பணிமனைகளில் இருந்தும் சுமார் 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தென்காசியில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பணிமனைகளில் இருந்தும் காவல்துறை பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
எனினும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில், ஈரோட்டில் 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. தஞ்சாவூரில் 50 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சாதியை பின்பற்றுவது தண்டைக்குரிய குற்றம் என மாணவர்கள் உணர வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு