தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தைப் பொருத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த காலகட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் நீராடிச் செல்கின்றனர்.
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளிப்பதற்குச் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதிக் காணப்படும். இந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவ்வப்போது திருடர்கள் குறிப்பாக பெண்களின் நகைகளைத் திருடிச் செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒரே நாளில் சுற்றுலாப் பயணிகளில் ஏழு நபர்களின் தங்க நகைகள் திருடப்பட்டதாகக் குற்றாலம் காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்தபோது மேலும் 9 நபர்களிடமிருந்து தங்க நகைகள் திருடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மொத்தமாக 66 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கூறுகையில், "அருவியில் பெண்களின் நகையைத் திருடிய குற்றவாளியைப் பிடித்து விசாரித்த போது மேலும் சில நபர்களின் பெயர்களைக் கூறியுள்ளதாகவும் எனவே அவர்களைத் தேடி வருவதாகக் கூறினார்.
மேலும், அருவியில் சீசன் காலகட்டங்களில் நகைகள் திருடப்பட்டதாகக் கொடுக்கப்பட்ட வழக்குகள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்த ஆண்டு இதுவே குற்றவாளி கண்டறியப்பட்டு நகை மீட்டதாகப்பட்டது முதல் முறை என தெரிவித்தார். அதோடு இந்த வழக்குகளைத் திறம்பட விசாரித்த காவல் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட எஸ்பி சாம்சன் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!