தென்காசி அருகே குற்றாலத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஐந்தருவியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர்க்கண்காட்சி, காய்கறி - பழம் கண்காட்சி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
கிராம்பு, சாதிக்காய், கசகசா, குறு மிளகு, ஏலக்காய், வெள்ளை குருமிளகு, சீரகம், சோம்பு, அன்னாசிப்பூ உள்ளிட்ட 17 வகையான பொருட்களைக்கொண்டு ஏழு அடி உயரம், 13 அடி நீளம், மூன்றரை அடி அகலம் கொண்ட டெல்லி செங்கோட்டை வடிவமைப்பு பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது.
நாகிலா, கார்நேஷன், அஸ்டர், லில்லி , ஹெலிகோனியா உள்ளிட்ட நூறு வகையான மலர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் காய்கறிகளைக்கொண்டு வரையாடு, மரகதப்புறா, மயில்கள் போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
விழாவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பள்ளி மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டு கண்காட்சியை ரசித்தனர்.
இதையும் படிங்க:'மிஸ் இந்தியா யுஎஸ்ஏ-2022' பட்டத்தை வென்றார் இந்தோ -அமெரிக்க அழகி!