தென்காசி: கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, சுற்றுலாத் தலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கும், கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஏப். 25) முதல் குற்றாலம் அருவிகளில் 24 மணிநேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் சுற்றுலாப் பயணிகளுக்கு அசாதரமான கவர்ச்சியை தருகிறது.
வழக்கமாக மே முதல் செப்டம்பர் மாதத்திற்கு இடையே உள்ள காலம் பருவகாலமாகும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அதிகப்படியான கூட்டம் இருக்கும். இங்கு ஐந்தருவி, பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்), புலியருவி, பழைய குற்றாலம் அருவி, பாலருவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளன.
இந்த அருவிகளுக்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழைநீர் நீராதாரமாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இதையும் படிங்க: சீசன் வரும் முன்பே ஆர்ப்பரிக்கும் குற்றால அருவி..!