தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன்(25). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மே 8ஆம் தேதி காவல் துறையினர் விசாரணைக்கு சென்ற குமரேசனை, உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பி விட்டார். பின்னர், மே 10 அன்று மீண்டும் விசாரணைக்கு குமரேசன் வீகேபுதூர் காவல் நிலையம் சென்றார்.
அப்போது குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் இருவரும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், பூட்ஸ் காலால் வயிறு, முதுகு பகுதியில் மிதித்து, லத்தியால் முதுகில் அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஜூன் 12 அன்று குமரேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூன் 27) இரவு குமரேசன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குமரேசன் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகனின் மருத்துவப் படிப்பிற்காக கடன் வாங்கிய தொழிலாளி: திருப்பி கட்டமுடியாததால் தற்கொலை முயற்சி