தென்காசி: பிரானூர் ஊராட்சி மன்றத்தில் கடந்த ஓராண்டு காலமாக மக்கள் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றாமலும், செய்த பணிகளின் கணக்கு விவரங்களை உறுப்பினர்களுக்கு கூட காட்டாமல் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி ஆவுடையம்மாள் ராஜா நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில் ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அரங்கத்திற்குள் அனுமதிக்காமல் "நீங்கள் எப்படி உள்ள வரலாம், யார் கூப்பிட்டது" என்று ஊராட்சி மன்ற தலைவி பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பின்னர் மன்ற உறுப்பினர்கள் மதன் குமாரவேல், தர்மசெல்வி, மஞ்சு, மாரியப்பன், இசக்கியம்மாள் ஆகியோர் உங்கள் நிர்வாக சீர்கேட்டை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்களை எப்படி வெளியே போக சொல்லலாம் என்று கேட்டு மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அவர்கள் தெரிவித்தது, "கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவித முக்கிய பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மேலும் செய்து முடித்த சில பணிகள் குறித்து கணக்கு விவரங்களை கேட்டால் அதையும் காட்டாமல் அதிகார தோரணையுடன் பேசி வருகிறார். பஞ்சாயத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை அருகில் உள்ள குளத்தில் கொட்டி தீ வைத்து வருகின்றனர். மேலும் அந்த குளத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட பன்றிகளை தலைவரின் கணவர் மேற்பார்வையில் பராமரித்து வருகிறார்.
அந்த குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ளதால், சுகாதார சீர்கேடுகளை உருவாக்கி வருகிறது. மேலும் தலைவர் தேர்தலில் தனக்கு அதிக வாக்களித்த வார்டு மக்களுக்கு அதிக பணிகளையும், குறைவாக வாக்களித்த வார்டு மக்களுக்கு எந்த பணியும் இன்றி பாரபட்சமாகவும் நடந்து வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். மற்றொரு பகுதி மக்களுக்கு வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்து வருகிறார். இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி உட்பட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் நாங்கள் 5 பேரும் பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்படும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Video: புதுசு புதுசா... யோசிக்கிறாங்கப்பா!... செல்ஃபி ஸ்டிக்கில் மறைத்து தங்கம் கடத்தல்!