தென்காசி: புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கூறி வரும் நிலையில், அப்பகுதிக்கு அருகேயுள்ள முந்தல் மலைப்பகுதியில் இருந்து வரும் ஆற்று நீர், சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வதாக புன்னையாபுரம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், முந்தல் பகுதியிலிருந்து வரும் தண்ணீரைப் பங்கீடு செய்வதில் புன்னையாபுரம் மற்றும் திருவேட்டநல்லூர் கிராமங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, முந்தல் பகுதியில் இருந்து வரும் தண்ணீரை, தங்கள் பகுதிக்கு மட்டும் பங்கீடு செய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக புன்னையாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் பகுதிக்கு மட்டுமே இந்த தண்ணீர் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, புன்னையாபுரம் கிராம மக்கள் நேற்று (நவ.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் போதிய அளவு தண்ணீர் இல்லை. மாறாக மற்ற பகுதிகளில் தண்ணீர் கொடுக்கக் கூடாது, இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்றனர்.
இருதரப்பு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் தண்ணீர் வழங்குவது என உத்தரவு போடப்பட்டதாக கூறப்படும் நிலையில், தங்கள் பகுதிக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்க வேண்டும் என புன்னையாபுரம் கிராம மக்கள் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தின்போது எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை சாலைகளில் சுற்றித் திரிந்த 57 மாடுகள் பிடிக்கப்பட்டது.. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!