தென்காசி: தமிழகத்தின் பொக்கிஷமான மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குற்றாலம். தமிழ்நாட்டின் பிரதான சுற்றுலாத்தளமான இங்கு மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி, பாலருவி உள்ளிட்ட சுமார் ஒன்பது அருவிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு சீசன் களைகட்டும்.
அதாவது ஜூன் மாதம் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி, பருவக்காற்று கேரளா மலைப்பகுதியில் இருந்து குற்றாலம் வழியாக தமிழகத்தை நோக்கி கீழ் திசையில் வீசும். கேரளாவில் பலத்த மழை பெய்யும் போது அங்கிருந்து மழைச்சாரல் காற்றோடு கலந்து குற்றாலத்தில் வீசும்.
அப்போது அருவிகளில் தண்ணீர் கொட்டும் எழில் கொஞ்சும் குற்றால சாரலை கண்டு ரசிக்கவும், அருவிகளில் ஆனந்த குளியல் போடவும் சீசன் நேரத்தில் ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென்காசிக்கு படை எடுப்பது வழக்கம்.
மேலும், அகஸ்தியர் உட்பட பல்வேறு சித்தர்கள் தங்கி இருந்து இயற்கை மருத்துவம் பார்த்த மலை என்று போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. மலையில் இருந்து அருவிகளுக்கு பாய்ந்து வரும் தண்ணீரில் மூலிகைகள் கலந்து அருவிகளில் கொட்டுவதால் குற்றாலத்தில் குளிப்பது பெரும் நன்மை தரும் என்னும் ஐதீகமும் உண்டு.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரத்யேகமாக விளையும் அறிய வகை பழங்களும் சீசன் நேரத்தில் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பர்வதமலை பெய்ய தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக விரைவில் தென்காசியில் தொடங்கும் என மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆண்டுதோறும் குற்றால சீசன் துவங்குவதற்கு முன்பாக அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். அதேபோல கடைகள் திறப்பதற்கும், குற்றாலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளும் செயல்படுத்தப்படும். அகவே, இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், குற்றால சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே புளியரை செங்கோட்டை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் அவ்வப்பொழுது குளிர்ந்த காற்றும், சாரல் மழையும் பெய்து வருகிறது. மேலும் குற்றால சீசனை நம்பி ரோட்டுப்புற கடைகளும், ஏலத்திற்கு இருக்கும் கடைகளும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியில் சீசன் எவ்வாறு அமையும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்த வருடம் கை கொடுக்குமா? குற்றால சீசன் எப்படி அமையும்? என பல கேள்விகளோடும், எதிர்பார்ப்புகளோடும் தொழிலாளர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே துவங்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் துவங்கக்கூடிய சீசன், தற்பொழுது வரை அதிகப்படியான சாரல் மழை இல்லாததினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான மழையும் பெய்யாமல் காணப்படுகிறது.
எனவே இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தற்போது வரை தீவிரமடையவில்லை. இதேநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும். தற்போதைய நிலவரப்படி பருவமழை துவங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால், குற்றால சீசனும் துவங்க வாய்ப்பில்லை. அடுத்த ஒரு வாரத்திற்கு தென்காசியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் பின்னரே குற்றால அருவிகள் களைகட்டும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கேரள எல்லையில் உலா வரும் அரிக்கொம்பன்: குமரி ஆட்சியர் தகவல்!